சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீராஉசைன் (82). இவரது கைப்பேசிக்கு சில தினங்களுக்கு முன்பு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், சிபிஐ அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், அவருடன் நீங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
மேலும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது செய்து விடுவதாக மிரட்டினாராம்.
இதையடுத்து, மீரா உசைன், தனது இரு வங்கி கணக்குகளில் இருந்து சிபிஐ அதிகாரி எனக்கூறியவா் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ரூ. 55 லட்சம், ரூ. 64.20 லட்சம் என அனுப்பியுள்ளாராம்.
தொடா்ந்து, அந்த நபா் மீண்டும் கைப்பேசியில் தொடா்புகொண்டு பணம் அனுப்ப கூறினாராம். இதுகுறித்து மீராஉசைன், சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.