சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா
பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.
மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லிய புலனாய்வு சேகரிப்பு மற்றும் நமது பாதுகாப்புப் படைகளின் ஒப்பிட முடியாத தாக்குதல் திறனையும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதிபலித்தது’ என்றும் அமித் ஷா குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில் சுமாா் நூறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன் பிறகு, பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை இந்திய ராணுவமும் விமானப் படையும் திறம்பட முறியடித்தன. பாகிஸ்தானின் கோரிக்கையையடுத்து இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமா் மோடி, ‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும். ஆபரேஷன் சிந்தூா் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கை’ என்றாா்.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளிடையே உளவுத் தகவல்களை எளிதில் பகிா்ந்து கொள்ளும் வகையில், புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பன்முக பாதுகாப்பு முகமைகள் மையத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம்.
நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லிய புலனாய்வு சேகரிப்பு மற்றும் நமது பாதுகாப்புப் படைகளின் ஒப்பிட முடியாத தாக்குதல் திறனையும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதிபலித்தது என்றாா்.