NEP: ``கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் ஒரே வழி..'' - முதல்வர் ஸ்டாலின்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், மத்தியப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, மேனாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற & உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

`கல்வியைக் காவி மயமாக்கும் திட்டம்' - உதயநிதி ஸ்டாலின்
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கல்வியைக் காவி மயமாக்கும் திட்டத்திற்கு ஃபாசிஸ்டுகளை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் நிலையில் கல்வித்துறை உள்ளது.
இந்தச் சவாலான சூழலில் முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன் சாதனைகள் செய்து வருகிறார் அன்பில் மகேஷ்.
`புதிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை கல்வியில் புகுந்து தமிழ்நாட்டை நாசமாக்கி விடக்கூடாது என கலைஞர் எச்சரித்தார். எல்லாவற்றிலும் சாதக பாதகம் இருக்கும். ஆனால் பாதகத்தை மட்டுமே கொண்டது என்றால் புதிய கல்விக் கொள்கை மட்டும்தான்.
புதிய கல்விக் கொள்கை எங்கு தொடங்கியது. அது எப்படிக் காவி மாயமானது, இதன் உருவாக்கத்தில் ஆர் எஸ் எஸ் எப்படி ஊடுருவியது போன்றவற்றை இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
மொத்தத்தில் யாரெல்லாம் படித்து மேலே வரவேண்டும் என்பதற்குப் பதிலாக, யாரெல்லாம் படிக்கக் கூடாது என்று வடிகட்டும் முயற்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை.

புதிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதும் பிள்ளைகளின் படிப்பை எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆவணம். கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாட்டின் எதிர்காலம் சிதைந்துவிடும்.
நமது குழந்தைகளின் எதிர்காலத்தை எழுதுகிற சக்பீஸை யார் கையில் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் கைகளிலா? அல்லது சர்வாதிகாரத்தின் கைகளிலா? என்று அன்பில் மகேஷ் எழுப்பியுள்ள கேள்வியை நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' நூலை ஸ்டாலின் வெளியிட திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அங்குசம் ஒன்றை அன்பில் மகேஷ் பரிசளித்தார்.
``நமக்கான அரண்..'' - அன்பில் மகேஷ்
அதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "ஒன்றிய அரசால் கஷ்டபட்டு நம்மீது பாய்ச்சபட்ட அதிகாரமே இல்லாத வேல் இங்கு உள்ளது. அது கூர் மற்றும் கூறு இல்லை.
அந்த வேலைப் பார்த்து நமது முதலமைச்சர் சந்தோஷப்படுகிறார். அந்த வேலை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் பலத்தால் ஒன்றிய அரசை ஓட வைத்துள்ளார் முதலமைச்சர்.
மத்திய அரசு சொல்வதைக் கேட்காமல் இருப்பதால் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமக்கான அரண் கலைஞரின் குடும்பம். அதனால்தான் அந்தக் குடும்பத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம்." என்று உரையாற்றினார்.

``புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை..'' - முதல்வர் ஸ்டாலின்
இறுதியாக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக திராவிட மாடலை மாற்றியிருக்கிறார் தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இப்படியொரு கல்விக் கொள்கையை பா.ஜ.க அரசு உருவாக்கியபோதே, புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை தமிழ்நாட்டுக்கு புகுந்து கல்வியில் சிறந்த தமிழ்நாட்டினை நாசப்படுத்திடவும், காலம் காலமாக நாம் போற்றி வருகிற சமூக நீதிக் கொள்கைக்கு கேடு ஏற்படுத்திடவும் அனுமதிக்க கூடாது என்று கலைஞர் அன்றைக்கு அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின் வரிகளையே புத்தகத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் அன்பில் மகேஷ்.
ஒன்றிய பா.ஜ.க-வை பொறுத்தவரைக்கும் எல்லாவற்றையும் காவிமயமாக்க வேண்டும். முதலில் கல்வியை காவிமயமாக்கக் கொண்டு வந்ததுதான் இந்த தேசிய கல்விக் கொள்கை.
அதனால்தான் இந்தப் புத்தகத்தின் மூலமாக, மதவாதம் உருவாக்கக்கூடிய அழிவுப்பாதையில் நாம் செல்ல போகிறோமா, நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்க சமூக நீதிப் பாதையை நோக்கி செல்ல போகிறோமா என்ற முக்கியமான கேள்வியை நாட்டை நோக்கி அன்பில் எழுப்பி இருக்கிறார்.
பா.ஜ.க-வின் செயல்பாடுகள், அதன் எதிர்கால எண்ணங்கள் என அனைத்தையும் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறோம்.
எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பா.ஜ.க-வின் காவி மாடல்.
எல்லோருக்கும் எல்லாம் என்று சொன்னால் அது திராவிட மாடல் கருத்தியல். எல்லாம் ஒருவருக்கு என்று சொன்னால் அது ஆரிய கருத்தியல்.

இதுதான் ஈராயிரம் ஆண்டுகளாக இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் போர். இந்தப் போர் ஏன் முக்கியமானது என்றால் இட ஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை சிதைத்து விடும்.
இட ஒதுக்கீடு இருக்கிற வரைக்கும்தான் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும். பன்முகப் பண்பாட்டை தேசிய கல்விக் கொள்கை தகர்த்துவிடும்.
75 ஆண்டு காலமாக கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டை சிதைத்து சமஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை உருவாக்குவதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.
தேசிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கூறியிருந்தார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ அதை உள்துறை அமைச்சரே கூறியிருக்கிறார்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் அழிக்கக்கூடிய முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான்.
அதற்கான போராட்டத்தை நாம் தீவிர படுத்த வேண்டும். பாடத் திட்டத்திலும், கற்க வேண்டிய மொழிகளையும் முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றிய அரசு திணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால் கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும். இதை பிரதமரிடம் 2022-ல் நேரடியாகவே வலியுறுத்தியிருக்கிறேன்.
மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய பண்பாடு இருக்கின்ற நாட்டில், குழந்தைகள் எந்த வழியில் படிக்க வேண்டும், எந்தப் பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குதான் இருக்க வேண்டும்.
எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரக்கூடிய நமது போராட்டம் தொடர வேண்டும்.

அது மட்டுமல்லாமல் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ. 2,152 கோடியை தராமல் முரண்டு பிடிப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடரத்தான் போகிறது.
எப்படி நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய தீர்ப்புகளைப் பெற்று இன்று இந்திய நாட்டின் மாநில உரிமைகளை பாதுகாத்திருக்கிறோமோ அதே மாதிரி இந்த வழக்கிலும் நாம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்." என்று கூறி தனது உரையை முடித்தார்.