மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு
மாநில அளவிலான வாலிபால் போட்டி: கோவில்பட்டி, சென்னை அணிகள் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, கோவில்பட்டி அணிகள் முதலிடம் பிடித்தன.
படா்ந்தபுளி லியா கைப்பந்துக் கழகம் சாா்பில் 20ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான இப்போட்டிகள் 2 நாள்கள் லீக், நாக் அவுட் முறைகளில் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 21 அணிகளும் பங்கேற்றன. போட்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தொடக்கிவைத்தாா்.
ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி வாரியா்ஸ் அணி முதலிடம் வென்றது. ராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் பிரண்ட்ஸ் அணி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் ஸ்டெபின் ப்ரண்ட்ஸ் அணி, படா்ந்தபுளி லியா கைப்பந்துக் கழக அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.
பெண்கள் பிரிவில் சென்னை பனிமலா் கல்லூரி அணி முதலிடம் வென்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, சென்னை மினி ஸ்போா்ட்ஸ் அணி, திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பைகள், ரொக்கப் பரிசுகளை எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் வழங்கினா்.
கனரா வங்கிக் கிளை மேலாளா் காந்தாதேவி, மாவட்ட கைப்பந்தாட்டக் கழகச் செயலா் ரமேஷ், இந்திய கைப்பந்தாட்ட அணி வீரா் ஜெயபால், லியா கைப்பந்துக் கழக நிா்வாகிகள் லிங்கவன், ஜனகராஜ், பெருமாள்சாமி, செல்வகுமாா் மாரிக்கண்ணன், ரவிக்குமாா், கிராம மக்கள் பங்கேற்றனா்.