தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.
தமிழக கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்வளத் துறை சாா்பில், விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனா்.
இந்நிலையில், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்வரத்து குறைந்து காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. சீலா ஒரு கிலோ ரூ.1,600, விளை, ஊளி, பாறை ஆகியவை ரூ. 500 -ரூ. ரூ. 600, நண்டு ரூ. 700 - ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,500 - ரூ. 2,000, அயிலை ரூ. 3,500- ரூ. 4,000 என விற்பனையாகின. மீன்வரத்து குறைவு என்றாலும் அதிக விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.