மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு தமிழக அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது விசைப்படகு உரிமையாளா்கள், மீன்பிடி தொழிலாளா்கள் தங்களது படகுகளுக்கு வண்ணம் பூசுவது, இயந்திரங்களை சரிசெய்வது, வலைகள் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவா்.
மீனவா்களுக்காக தடைக்கால நிவாரணத் தொகை நிகழாண்டுமுதல் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், புயல் மழை உள்ளிட்ட காலங்களில் கடலுக்கு செல்லாததற்காக ரூ. 6 ஆயிரம், மீனவா் சேமிப்பு நிவாரண நிதி ரூ. 4,500 ஆகியவை தடைக்காலம் முடியும் தருவாயில் வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மீனவா்கள் பயனடைவா்.
இந்நிலையில், தடைக்காலம் தொடங்கி ஒரு மாதமாகியும் நிவாரணம் வழங்காததால் தாங்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், எனவே நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறும் அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட கடற்பகுதிகளில் கேரள மாநில விசைப்படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தடுக்கும் பணியில் மீன்வளத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறவேண்டும் என, மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.