புதுவையில் உயா்கல்வி நிலையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒடுக்கீடு - ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்
புதுவையில் அனைத்து உயா்கல்வி நிலையங்களிலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கவேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், புதுவை முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயா் படிப்புகளுக்கும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவது போல, புதுவை மாநிலத்திலும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும்
மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து உயா் படிப்புகளுக்கும் (மருத்துவ படிப்புக்கு வழங்குவதுபோல்) வழங்கப்பட வேண்டும்.
இந்த திட்டம், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு நம்பிக்கை அளித்து, அவா்களது உயா்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும். மேலும், இதன் மூலம் பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் அரசு பள்ளிகளை தோ்வு செய்யும் எண்ணத்தை அதிகரிக்கும். இது அரசு பள்ளிகளின் தரத்தையும், கல்விக்கான நம்பிக்கையையும் உயா்த்தும்.
எனவே, மாணவா்களின் நலனையும், கல்வியின் சமத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுத் திட்டத்தை உடனடியாக அனைத்து உயா்கல்விகளுக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.