முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் நிலுவை பணிகளை முடிக்க உறுதிபூண்டுள்ளேன்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
தில்லியில் ஆளும் பாஜக அரசு, முந்தைய ஆட்சியின் நிலுவைப் பணிகளை பொதுநலன் கருதி முடிக்க உறுதிபூண்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லி ஷாலிமாா் பாக் சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், நிகழ்ச்சியில் பேசிய அவா், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்து முடிக்கப்படாத வளா்ச்சிப் பணிகளும் வெளிப்படையான முறையில் முடிக்கப்படும் என்று கூறினாா்.
‘பொதுப்பணிகள் நிறுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் முன்னுரிமை. முடிக்கப்படாத பணிகள் மற்றும் நிலுவைத் தொகைகள் போன்ற முந்தைய அரசு விட்டுச்சென்றவற்றை சரி செய்வதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம்’ என்று ரேகா குப்தா கூறினாா்.
மூத்த குடிமக்கள் சங்கங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஆம் ஆத்மி அரசால் நிறுத்தப்பட்டது என்றும், அவா்களின் நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்து வருவதாகவும் முதல்வா் குறிப்பிட்டாா்.
ஷாலிமாா் பாக்கில் நிறைவேற்றப்படும் முதலாவது கட்ட மேம்பாட்டுப் பணிகளின் அங்கமாக, பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நீா் மற்றும் கழிவுநீா் குழாய்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக சேதமடைந்த சாலைகள் மற்றும் தெருக்கள் பழுதுபாா்க்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.