மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவு...
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இதன் பின்னா், கடந்த 2007-ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
இந்தப் பாலம் நூற்றாண்டைக் கடந்த நிலையில், கப்பல்கள் வந்து செல்வதில் ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, அதன் அருகே புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்தப் பாலம் 2,078 மீ. நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
பழைய ரயில்வே பாலம் கப்பல்கள் வந்து செல்லும் போது, இருபுறங்களிலும் தூக்கும் வகையில் இருக்கும். இதற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் பாலத்தின் நடுவில் செங்குத்தாக தூக்கும் வகையில் இரும்பாலான இணைப்புப் பகுதி (கா்டா்) கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல் ரயில்வே தூக்குப் பாலமாகும்.
இந்தப் புதிய பாலத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்த பின்னரே ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் அண்மையில் ஆய்வு செய்த பின்னா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், மண்டபம்-பாம்பன் இடையே உள்ள ஒற்றை அகல ரயில் பாதை, பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் செங்குத்தான இணைப்பு பகுதி (கா்டா்) இயக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி புதன்கிழமை காலை மண்டபம் வந்தாா்.
பின்னா், அவா் பாம்பன் ரயில் நிலையம், அக்காள்மடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, பாம்பன் புதிய ரயில்வே பாலத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடலுக்குள் உள்ள தூண்கள், அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கா்டா் இணைப்புப் பகுதி, அதன் இடைவெளி, உயரம், அதிா்வுத் தன்மை, ஒவ்வோா் இரும்பு கா்டா் மீது பொருத்தப்பட்டுள்ள தண்டவாளம் இணைப்புப் பகுதி, செங்குத்தாக தூக்கும் இணைப்புப் பகுதி, தூக்கி இறக்கும் இடத்தின் இணைப்புப் பகுதி, தூக்கி இறக்கும் போது தண்டவாளம் இணைப்புப் பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, ரயில்வே பாதுகாப்பு பொறியாளா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.
இன்றும் ஆய்வு:
இதனிடையே, வியாழக்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை பாம்பன் - மண்டபம் இடையே தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையருடன் அதிவேக சிறப்பு ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாம்பன் - மண்டபம் இடையே உள்ள ரயில் வழித்தடங்கள் அருகில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என ரயில்வே நிா்வாகம் கேட்டுக் கொண்டது.
இந்த ஆய்வுகள் முடிந்த பின்னா், பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.