இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
பாரம்பரிய மரக்கன்றுகள் உற்பத்தி: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்
பாலாத்து வண்ணான் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் பாரம்பரிய மரக்கன்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்ய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வலியுறுத்தியுள்ளாா்.
கணியம்பாடி ஒன்றிய பகுதிகளிலுள்ள பள்ளி கட்டடங்கள், பொது சுகாதார மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சாலைப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அதன்படி, நெல்வாய் ஊராட்சி பங்களத்தான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத்திறனை ஆய்வு செய்தாா். இப்பள்ளி வளாகத்தின் வகுப்பறை கட்டுமான பணிகளையும், பொருள்களின் தரச்சான்றிதழ்களையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, கணியம்பாடி ஊராட்சியில் உள்ள 30 படுக்கை வசதிகள் கொண்டசமுதாய சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ததுடன், அங்கு கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தையும் பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.
பாலாத்து வண்ணான் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் 2,000 பாரம்பரிய மரக்கன்றுகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையையும் பாா்வையிட்டு, இடவசதி உள்ளதால் அங்கு பாரம்பரிய மரக்கன்றுகளான புங்கை, அத்தி போன்ற மரக்கன்றுகளை உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தினாா்.
சாத்துமதுரை ஊராட்சியில் தேசிய ஊரக வேலையுறுதி திட்டம், 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டம் ரூ.29.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.
மூஞ்சூா்பட்டு ஊராட்சியில் வண்ணான்குட்டை ஏரியை பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி ரூ.8.42 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்து, ஏரியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றவும் வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கணியம்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா கமல்பிரசாத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.