பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?
பிரிட்டன் நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து புதிய பிரதமராக கியெர் ஸ்டார்மர் கடந்த 2024 ஜூலை மாதம் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் வரி செலுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக அந்த நாட்டின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேய்னர் (Angela Rayner) பதவி விலகினார். இதையடுத்து பிரிட்டன் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லாமி துணைப் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பல்வேறு துறை அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு/ மாற்றப்பட்டுள்ள நிலையில் நாட்டின் உள்துறைச் செயலாளராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷபானா மஹ்மூத் பிரிட்டனின் புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஏஞ்சலா ரேய்னரின் ராஜிநாமாவுக்குப் பிறகு உள்துறை செயலாளராக யெவெட் கூப்பர் பதவியேற்ற நிலையில், தற்போது ஷபானா மஹ்மூத் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த செப். 5 ஆம் தேதி அவர் நாட்டின் உள்துறை செயலாளராக பதவியேற்றார்.
பிரிட்டனில் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உள்துறை செயலாளராக ஒரு முஸ்லிம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
காவல், குடிபெயர்தல், கொள்கைகள், தேசிய பாதுகாப்பு, நாட்டின் சட்டம் - ஒழுங்கு ஆகியவை அடங்கிய முக்கியமான துறையாக இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஷபானா தனது எக்ஸ் பக்கத்தில்,
"உள்துறைச் செயலாளராகப் பணியாற்றுவது என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த மரியாதை.
அரசின் முதல் பொறுப்பு நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதே.
அந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு நாளும் இந்தப் பணியில் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
It is the honour of my life to serve as Home Secretary.
— Shabana Mahmood MP (@ShabanaMahmood) September 5, 2025
The first responsibility of government is the safety of its citizens.
Every day in this job, I will be devoted to that purpose. https://t.co/w3UxrNLb2p
யார் இந்த ஷபானா மஹ்மூத்?
1980 செப்டம்பர் 17 ஆம் தேதி பிர்மிங்காமில் பிறந்த மஹ்மூத்தின் பெற்றோர் சுபைதா - மஹ்மூத் அஹமது ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். தந்தையின் பணி காரணமாக 1986 வரை சௌதி அரேபியாவில் இருந்த அவர், பின்னர் இங்கிலாந்து சென்றார். ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்காடக்கூடிய பாரிஸ்டர் பட்டத்தை இளம் வயதிலேயே பெற்றார். அவரது தந்தை தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதியான பிர்மிங்காம் லேடிவுட் தொகுதியின் எம்.பி.யாகத் தேர்வானார். ஒரு முஸ்லீம் பெண், பிரிட்டன் எம்.பி.யாவது அதுவே முதல்முறையாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் முஸ்லீம் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெற்ற அவர், சிறைச்சாலைகள் மற்றும் கருவூலத்திற்கான நிதிச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை மறைமுகமாக கையாண்டார்.
ஜெர்மி கோர்பினின் தலைமையிலான ஆட்சியில் அவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஸ்டார்மரின் தலைமையின் கீழ் மீண்டும் அரசியலுக்கு வந்தார்.
2023 ஆம் ஆண்டில் அவர் மறைமுக நீதிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சட்டம், நீதிமன்ற செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரது பதவிக் காலத்தில் சிறைகளில் அதிக நெரிசலைக் குறைக்கும் நோக்கில் நீண்ட நாள் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
சவால்கள் என்னென்ன?
தற்போது உள்துறைச் செயலாளராக நியமிக்கப்படும் மஹ்மூத், முக்கிய சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறார். பிரிட்டனுக்கு இடம்பெயரும் பல்வேறு நாட்டினரின் கோரிக்கைகள், நாடு கடத்தல், குழு விசாரணைகளை சீர்படுத்துதல், காவல்துறை சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவ, சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அவர் நாடு கடத்தலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து கவலை தெரிவிப்பதாகவும் அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஹமாஸின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தற்போது பாலஸ்தீனத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து வருகிறார். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கருணைக் கொலை, கருக்கலைப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது பெரிதும் பேசப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்திலும் குறிப்பாக குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்விதமாக அவரது நியமனம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் நாள்களில் பிரிட்டன் அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், முக்கிய முடிவுகளில் மஹ்மூத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.
கடந்த 2018 முதல் பிரிட்டனின் 6 உள்துறை செயலாளர்களும் பிரிட்டனில் வெளிநாட்டினர் குடிபெயர்தல் விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையில் மஹ்மூத் அதை எப்படி கையாள்வார்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Who is Shabana Mahmood? UK 1st Muslim Woman Home Secretary
இதையும் படிக்க | ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?