புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
ஒசூா் வழியாக தூத்துக்குடிக்கு கடத்த முயன்ற 86 கிலோ புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில மதுப் புட்டிகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காருக்குள் 86 கிலோ புகையிலைப் பொருள்கள், 36 மதுப் புட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பெங்களூரிலிருந்து இப்பொருள்களை தூத்துக்குடிக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், விஜயபுரியை அடுத்த கருக்கல்குளத்தை சோ்ந்த ஓட்டுநா் மணிகண்டன் (29), அதேபகுதியைச் சோ்ந்த குருசாமி (23) ஆகிய இருவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.