Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
புதுகை மாவட்ட கலைத் திருவிழா தொடக்கம்
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் ஏற்கெனவே பள்ளி, வட்டார அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் வென்ற மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 19 வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் 2,469 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனா். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள், மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோா், மாநில கலைத் திருவிழாவில் பங்கேற்கவுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.