புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா!
புதுச்சேரி கடற்கரையில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.
’இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.
மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீட்டிலேயே இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்தது. இதுவே, மறுவெளியீட்டில் ஆயிரம் நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா.
இதையும் படிக்க: எம்புரான் படத்திலிருந்து விலகிய லைகா?
இந்த நிலையில், நேற்று (மார்ச் 15) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பெரிய எல்ஈடி திரை மூலம் புதுச்சேரி ராக் கடற்கரை பகுதியில் திரையிட்டுள்ளனர்.
❤️ Finally #VinnaithaandiVaruvaaya Screening On Pondicherry RockBeach @SilambarasanTR_#VTV_screening_At_Pondy#SilambarasanTR#Atmanpic.twitter.com/EFdGKIFazZ
— Hema Kumar STR (@Hemakumar_STR) March 15, 2025
இதனை, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி அமர்ந்து கண்டுகளித்தனர். இதற்கு, பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து இதுபோல் கடற்கரை பகுதிகளில் காட்சிப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதைப்பார்த்த சென்னை ரசிகர்கள் மெரினா கடற்கரையிலும் இதுபோல் செய்யலாமே என தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.