புதுச்சேரி: `சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தோல்விக்கு மாநில அரசே காரணம்!’ - திமுக குற்றச்சாட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்ததற்கு, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சுமத்தியிருக்கிறார்.
`விடைத்தாள்களின் நகலுக்கு ரூ.500 வாங்கும் அரசு’
இது குறித்துப் பேசிய அவர், ``புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியதன் விளைவாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தோல்வியடைந்துள்ளனர். இந்த தோல்வி புதுச்சேரி அரசின் கல்விக் கொள்கையின் தோல்வியை தெளிவாக உணர்த்துகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவு, அரசின் திட்டமிடப்படாத அணுகுமுறையையும் காட்டுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சியோ, மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலோ வழங்கப்படவில்லை.

அதன் விளைவாக, மாணவர்கள் கடுமையான உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த அவலநிலைக்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறேன். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், தங்கள் விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.500/- செலுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல ஒரு கேள்விக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.100/- செலவாகிறது. அதேசமயம், தமிழ்நாடு மாநில சமச்சீர் பாடத்திட்டத்தில் விடைத்தாள் நகலை பெறுவதற்கு செலவாகும் தொகை வெறும் ரூ.275/- மட்டும்தான்.
`புதுச்சேரி அரசின் செயல் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்...’
அத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நகல்களைப் பெறுவதற்கு இரு மடங்கு செலவாகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டணங்கள், மாத கடுமையான நிதிச்சுமையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தங்களின் விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நினைக்கும் மாணவர்களின் தலையில், இப்படியான செலவுகளை ஏற்றுவது அநீதியான ஒன்று. இப்படியான பொருளாதார பாதிப்புகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக அமைவதுடன், உளவியலாகவும் அவர்களை பாதிக்கிறது.

அதேபோல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்ட தோல்விகள், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், தோல்வியின் உளவியல் தாக்கத்தையும், மறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான செலவுகளையும் தாங்க முடியாமல் கல்வியை கைவிடும் நிலைக்த் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இத்தகைய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டும் பயிற்சிகளோ, மறுதேர்விற்கு உரிய வழிகாட்டுதலோ முறையாக வழங்கப்படவில்லை. புதுச்சேரி அரசு இதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது” என்றார்.