Nobel Peace Prize: "நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்" - மரியா கொரினா ம...
புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக
`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த சம்பவம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ``புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் துறை சார்ந்த பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், மீறினால் இண்டர்னல் மதிப்பெண்களை வழங்க மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் இணையத்தில் பேசி அனைவரையும் பதறச் செய்தார்.

அப்படி இருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பாக எந்தவித விசாரணைக் கமிட்டியும் அமைக்காமல் மெத்தனமாக இருந்துள்ளது. இதனிடையே காலாப்பட்டில் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகத்தில் துறை பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் அதே குற்றச்சாட்டை முன்வைத்து, விசாரணைக் கோரி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.
பாலியல் புகார்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் சுமத்தியும் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் இதுகுறித்து மானியக் குழு பரிந்துரைத்துள்ள விசாரணைக் கமிட்டி அமைக்காமல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாண்டு இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இதனிடையே பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கண்டித்தும், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் அமைதியான வழியில் மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் உறுதியான நடவடிக்கை இல்லாத காரணத்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியிருக்கின்றனர்.
அத்துடன், வலுக்கட்டாயமாக அவர்களைக் கைது செய்திருக்கின்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக மாறியிருக்கிறது. இந்த செயலை இணையத்தில் பார்த்த பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு, நள்ளிரவு முதல் காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மீது காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம், மாணவர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை தி.மு.க வேடிக்கை பார்க்காது. இந்த நிலை தொடர்ந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அப்படி நடந்தால் புதுச்சேரி மாநிலம் போர்க்களமாக மாறி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், புதுச்சேரி அரசும் உணர வேண்டும். அதனால் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரிக்கிறேன்” என்றார்.