சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
Rambo Review: பாக்ஸிங் கதையில் பன்ச் என்னமோ நமக்குத்தான்! அருள்நிதி - முத்தையா ஆக்ஷன் காம்போ எப்படி?
மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்திவருகிறார் ஸ்ட்ரீட் பாக்ஸரான அருள்நிதி. அந்த இல்லத்தைக் காலி செய்ய வேண்டிய சூழலால் பெரிய பணத்தேவையில் மாட்டுகிறார்.
மறுபுறம், பெரிய கல்விக் குழுமத்தின் தலைவரான ரஞ்சீத் சஜீவ்வின் ஆட்கள், தன்யா ரவிசந்திரனைத் தேடிக் கொலை செய்யத் துடிக்கிறார்கள்.
இந்நிலையில், பணத்திற்காக தன்யாவைக் காக்கும் பொறுப்பைக் கையிலெடுக்கிறார் அருள்நிதி.
இதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, தன்யாவை ஏன் துரத்துகிறார்கள், அருள்நிதிக்கும் ரஞ்சீத் சஜீவ்விற்கும் உள்ள தொடர்பு என்ன, அருள்நிதிக்குத் தேவையான பணம் கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கான பதிலை வேண்டா வெறுப்பாகச் சொல்லியிருக்கிறது முத்தையா இயக்கியுள்ள 'ராம்போ' திரைப்படம்.
சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது இந்தத் தமிழ் சினிமா.

படம் முழுவதும் ஒரே மீட்டரில், வழக்கமான கதாநாயகியாக வந்தாலும், தேவையான எமோஷனைக் கடத்தியிருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.
நடையுடையில் மட்டும் கவனிக்க வைக்கும் ரஞ்சீத் சஜீவ், உருட்டி மிரட்ட வேண்டிய இடங்களில், எந்தத் தாக்கத்தையும் தராமல் படம் முழுவதும் வந்து போகிறார்.
சம்பிரதாய ரவுடியாக டிராகன் மஞ்சு, வில்லனுக்குத் துணையாக 'பிக் பாஸ்' ஆயிஷா, கதாநாயகனின் நண்பனாக ஜென்சன் திவாகர் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்ய, சிரிக்க வைக்கும் பெரும் போராட்டத்தில் போலீஸாக விடிவி கணேஷும், பின்கதையில் அபிராமியும் வந்து போகிறார்கள்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. தேவையான இடங்களில் நிதானத்தைத் தேட வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன்.
ஜிப்ரான் வைபோதாவின் இசையில் 'மயக்கம் என்ன' பாடலும், பின்னணி இசையும் ஓகே ரகம்.

நல்லெண்ணம் கொண்ட ஆக்ஷன் கதாநாயகன், பாவப்பட்ட நல்ல கதாநாயகி, கொடூரமான வில்லன், மோதிக்கொள்ளும் ஆக்ஷன் படலம் என்ற பழிவாங்கும் கதையைப் பரண் மேலிருந்த பழைய பேப்பர் கட்டிலிருந்து உருவியெடுத்து, தூசியைத் தட்டக்கூட சோம்பேறித்தனப்பட்டு, ஆக்ஷன் த்ரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.
கதாநாயகன் - அம்மா பாசம், கதாநாயகனின் ஆதரவற்ற பிள்ளைகள் மீதான பாசம், கதாநாயகனின் பாக்ஸிங் உலகம், கதாநாயகனைக் காதலிக்கும் கதாநாயகி, வில்லனின் கொடூரமான பின்னணி, கதாநாயகனுக்கும் வில்லனுக்குமான பின்கதை என டஜன் கணக்கான கிளைக்கதைகளைக் கொத்தாகக் கட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால், எதுவுமே ஆழமும், போதுமான அழுத்தமும் இல்லாமல் ஆலம் விழுதாக ஊசலாடுகின்றன. முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை எல்லாம் கணிக்கும்படி எழுதப்பட்டுள்ளதால், ட்விஸ்ட்களும் (!) எந்தத் தாக்கமும் தராமல் ஓடுகின்றன.

மிரட்டவே மிரட்டாத வில்லன், காமெடி என்ற பெயரில் போலீஸ் செய்யும் டிராமா, லாஜிக்கே இல்லாத சேசிங், காதலே இல்லாத காதல் காட்சிகள் எனப் பார்வையாளர்களோடு குத்துச்சண்டை போடுகிறது திரைக்கதை.
வில்லனின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நமக்கே கண்கள் குளமாகின்றன. நடிகர்களும், அடிப்படையான தொழில்நுட்ப ஆக்கமும் மட்டுமே ஆறுதல்!
புதுமை இல்லாத கதை, அழுத்தமில்லாத திரைக்கதை என மொத்த பாக்ஸிங் ரிங்கும் தள்ளாடுவதால், பார்வையாளராக வந்த நம் முகத்தையும் சேர்த்தே பதம் பார்க்கிறார் இந்த 'ராம்போ'.