சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ புதுச்சேரியை அதிர வைத்திருக்கிறது. அதையடுத்து, `மாணவிகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கக் கூடாது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி நேற்று இரவு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
`ரௌடிகளை இப்படி அடிப்பீங்களா?’
அப்போது அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸார், ஷு கால்களாலும் எட்டி உதைத்தனர். அதையடுத்து சுமார் 25 மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். மாணவர்கள் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ, பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் வைக்கப்பட்டிருந்த காலாப்பட்டு காவல்நிலையத்திற்கு சென்ற அந்த தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ``இவர்கள் அனைவரும் மாணவர்கள்.

ஆனால் நீங்கள் கொலைக் குற்றாவாளிகளைப் போல நடத்துகிறீர்கள் ? கொலை செய்த ரௌடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துவிட்டு, மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைக்கிறீர்கள் ? கொலைகாரர்களையும், ரௌடிகளையும் இப்படி நீங்கள் அடிக்கும் ஒரு வீடியோவை உங்களால் காட்ட முடியுமா ?” என்று கடுகடுத்தார்.