புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம...
Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?
பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் முழுவதும் கட்டுமானங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன. நீர், உணவு ஆதாரங்களை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருப்பதால் கடும் பஞ்சம் நிலவுகிறது.
போரில் இதுவரையில் 67,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிவாரண உதவிகளைப் பெற அமெரிக்க-இஸ்ரேலிய அமைப்புகளிடம் கையேந்திய தந்தையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வீரர்களின் தோட்டாக்களுக்கும், அதிநவீன - பல கோடிகள் மதிப்புள்ள போர்விமானங்கள் வீசிய குண்டுகளுக்கும், பீரங்கி குண்டுகளுக்கும், ஆளில்லாத ட்ரோன்களின் தோட்டாக்களுக்கும், ஏவுகணைகளுக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர் பறிபோயிருக்கிறது.

சுமார் 20,000 குழந்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டுள்ளனர். நாற்பதாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் ஊனமாக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து காசா மக்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை மனிதாபிமான உதவிகளைக் கூட இஸ்ரேல் மறுத்து வருகிறது. உணவும், தண்ணீருமில்லாமல் எத்தனையோ குழந்தைகள் தினம் தினம் இறந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த பூமியில் மனித இனத்தின் அதி அவலமான வாழ்க்கை இதே நொடியில் காசாவில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன, இதனைக் களைய எடுக்கப்படும் முயற்சிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் - காசா - அடிப்படைப் பிரச்னை என்ன?
இன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இருக்கும் பகுதி யூதர்கள்-இஸ்லாமியர்கள்-கிறிஸ்தவர்களின் புனித இடமாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபோது, ஹிட்லரின் யூத இன அழிப்புக்குப் பிறகு, உலக நாடுகளில் பெரும்பாலானவை யூதர்களுக்கு என ஒரு நாடு இருக்க வேண்டும் என முடிவு செய்தன.
1948ம் ஆண்டு பிரிட்டனுடன் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐ.நா சபையும் இணைந்து பாலஸ்தீனத்திலிருந்து நிலப்பரப்பைப் பிரித்து இஸ்ரேலை உருவாக்கின. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. இதனால் அரபு - இஸ்ரேல் போர் நடைபெற்றது. அரபு நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததாலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவினாலும் இஸ்ரேல் இந்தப் போரை வென்றது.
அப்போது முதல் இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனான், சிரியா, ஜோர்டான், மற்றும் பாலஸ்தீனப் பிரதேசங்களின் (மேற்கு கரை, காசா) நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நாடுகளுடன் இஸ்ரேல் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டுவந்தது.
பாலஸ்தீனம் சுதந்திர அரசாக 138 ஐ.நா. உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும், இஸ்ரேல், அமெரிக்கா, மற்றும் சில மேற்கத்திய நாடுகள் இதை அங்கீகரிக்கவில்லை. இது எல்லை பிரச்னையையும், தலைநகர் (கிழக்கு ஜெருசலேம்) தொடர்பான தகராறுகளால் மோதலையும் ஏற்படுத்திவருகிறது.
பாலஸ்தீன அங்கீகாரமும் ஹமாஸும்
1987ம் ஆண்டு உருவான ஹமாஸ் அமைப்பு, 1980களில் நடந்த பாலஸ்தீன எழுச்சிக்குப் பிறகு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. இஸ்ரேலை ஹமாஸ் அதிகாரப்பூர்வ நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை.
பாலஸ்தீனத்தின் மற்றொரு அரசியல் இயக்கமான பத்தா (Fatah) மதச்சார்பற்ற, தேசியவாத அமைப்பாகும். இஸ்ரேலுடன் இருநாட்டுத் தீர்வு என்ற உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறது.
2006ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தா - ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக காசாவை முழுமையாக ஹமாஸ் கைப்பற்றியது.
மேற்குகரைப் பகுதியை பத்தா நிர்வகிக்கிறது. அதில் 60% பகுதிகள் முழுமையாக இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. நிர்வாகத்திலும் இஸ்ரேலின் தலையீடு உள்ளது. எல்லைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் இஸ்ரேல் கண்காணிப்பில் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளும் இஸ்ரேலைக் கடந்தே வருகின்றன.
பாலஸ்தீன போலீஸுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதி இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி இல்லை. மேற்குகரைக்குள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் ராணுவம் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடலாம். ஆக, மேற்குகரை என்பது முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொம்மை பாலஸ்தீன அரசு.
இஸ்ரேலை ஹமாஸ் முழுமையாக எதிர்ப்பதுடன் பாலஸ்தீனத்துக்குள் இஸ்ரேலின் தலையீட்டைச் சிறிதும் விரும்பவில்லை. காசா பகுதி மேற்குகரையில் இருந்து துண்டிக்கப்பட்டு, இஸ்ரேலின் முற்றுகையில் இருப்பதால் 2007ம் ஆண்டு முதல் மக்கள் கிட்டத்தட்ட சிறையில் வாழ்வதுபோன்ற சூழல் ஏற்பட்டது.
மின்சாரம், தண்ணீர், மருந்து, உணவு ஆகியவற்றை இஸ்ரேல் கட்டுப்படுத்தி காசாவில் நிர்வாகத்தைச் சீர்குலைத்தது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஹமாஸ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
2020ம் ஆண்டு Abraham Accords உடன்படிக்கைக்குப் பிறகு யு.ஏ.இ, பஹ்ரைன், மொராக்கோ, சூடான் உள்ளிட்ட சில அரேபிய நாடுகளுடன் ஹமாஸ் உறவை மேம்படுத்தியது. சிரியா, லெபனான், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

தீவிர வலதுசாரியான நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் மேற்குகரையில் யூத குடியேற்றங்களைப் பெருக்கியது இஸ்ரேல். மேற்குகரையில் பாலஸ்தீன அரசை மேலும் பலவீனமாக்கியது. இந்தச் சூழலில் அக்டோபர் 7, 2023ல் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தியது.
மிகப் பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் சென்ற ஹமாஸ் வீரர்கள் நூற்றுக்கணக்கானோரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வந்தனர். இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழுமையான போரை அறிவித்தார். அதுவே காசாவில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸை முழுமையாக அழித்தொழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்கிறார் நெதன்யாகு.
ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டம்: முதல் கட்டத்துக்கு ஒப்புதல்!
அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு பல நாடுகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தன. குறிப்பாக கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயன்றன. சில பேச்சுவார்த்தைகள் சில நாட்கள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினாலும் நிலைத்த அமைதி ஏற்படவில்லை.
பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஐ.நா-வில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலை இருந்தாலும் முக்கிய தீர்மனங்களை அமெரிக்கா அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற இயலாமல் செய்துவந்தது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்குக் கொடுக்கும் எல்லையற்ற ஆதரவு, அமைதிக்கான சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை மங்கச் செய்துவிடுவது, அமைதி ஏற்படாததற்கு முக்கியக் காரணமாக இருந்தது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 20 அம்ச 'காசா அமைதி திட்டத்தை' வெளியிட்டார். இதை ஹமாஸும், பத்தாவும் முழுமையாக ஏற்கவில்லை. காசாவில் அமைதியை ஏற்படுத்துவதுடன் ஹமாஸ் மொத்தமாகக் கலைக்கப்பட அந்தத் திட்டம் வழி செய்கிறது.
ஹமாஸ் இதைப் பகுதியளவு ஏற்றுக்கொள்வதாகவும் பிற விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இஸ்ரேல் இதனை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ட்ரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதற்கான கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஹமாஸ் முழுமையாக ஏற்காத அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீன மக்களும் சந்தேகத்துடனேயே அணுகுகின்றனர். இது அமைதி ஒப்பந்தம் அல்ல ஒப்படைப்பு நடவடிக்கை என்ற விமர்சனங்களும் உள்ளன. ட்ரம்ப் உடன்படிக்கை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.