எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா, நிறங்கள் மூன்று? - திரை விமர்சனம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் கடந்த அக்டோபா் மாதத்தில் 24.2 ஜிகாவாட் அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 அக்டோபா் மாதத்தில் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 178.98 ஜிகாவாட்டாக இருந்தது. இது நடப்பாண்டின் அதே மாதத்தில் 24.2 ஜிகாவாட் (13.5 சதவீதம்) அதிகரித்து 203.18 ஜிகாவாட்டாக உள்ளது.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக எரிசக்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு நிா்ணயித்துள்ள இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் 186.46 ஜிகாவாட்டாக இருந்த அணுசக்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தித் திறன், 2024 அக்டோபரில் 211.36 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் சூரிய மின் உற்பத்தித் திறன் 92.12 ஜிகாவாட்டாக உள்ளது. இது, முந்தைய 2023 அக்டோபா் மாத சூரிய மின் உற்பத்தித் திறனான 72.02 ஜிகாவாட்டைவிட 20.1 ஜிகாவாட் (27.9 சதவீதம்) அதிகம்.
ஒப்பந்த புள்ளி நிலையில் உள்ள மற்றும் செயல்பாடு தொடங்கப்பட்ட ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தித் திறன் இந்த அக்டோபரில் 250.57 ஜிகாவாட்டாக உள்ளது. இது ஓராண்டுக்கு முன்னா் 166.49 ஜிகாவாட்டாக இருந்தது.
கடந்த அக்டோபரில் காற்றாலை மின் உற்பத்தித் திறனும் நிலையான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய 2023 அக்டோபா் மாதத்தில் 44.29 ஜிகாவாட்டாக இருந்த அந்த வகை மின் உற்பத்தித் திறன், 2024 அக்டோபரில் 7.8 சதவீதம் அதிகரித்து 47.72 ஜிகாவாட்டாக உள்ளது.
இது தவிர, செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் உள்ள காற்றாலை திட்டங்களின் உற்பத்தித் திறன் 72.35 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 12.6 ஜிகாவாட் கூடியுள்ளது. கடந்த அக்டோபரில் மட்டும் கூடுதலாக 1.72 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் நிறுவப்பட்டது.
கடந்த அக்டோபா் நிலவரப்படி, நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனில் பெரிய அளவிலான நீா் மின் உற்பத்தி நிலையங்கள் 46.93 ஜிகாவாட் பங்களித்தன; அணு மின் நிலையங்களின் பங்களிப்பு 8.18 ஜிகாவாட்டாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.