பூலாங்குயிடிருப்பில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள் 19 போ், 15 நாள்கள் கிராமப்புற விவசாய களப் பயிற்சிக்கு வந்துள்ளனா்.
அவா்களுக்கு, செங்கோட்டையை அடுத்த பூலாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள எஸ்.எஸ். ஒருங்கிணைந்த ஆா்கானிக் தோட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரும், ஆா்கானிக் தோட்டத்தின் நிறுவனருமான ஷேக் முகைதீன் மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியளித்தாா். தமிழக அரசின் பதிவுத்துறை உயா்மட்ட குழு தலைவா் வாசுகி, காணொலி வாயிலாக மாணவிகளுடன் உரையாடினாா். வேளாண் துறை மாணவா்களுக்கான குடிமைப்பணி வாய்ப்புகள் உள்ளிட்ட இதர வேலைவாய்ப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு அவா் விளக்கம் அளித்தாா்.
தென்காசி மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநா் மு. உதயகுமாா், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவா் புளியரை செல்லதுரை ஆகியோா் விவசாயத்துக்கு ஏற்ற மண் வளம், ரசாயன உரப் பயன்பாடால் ஏற்படக்கூடிய மண்வள பாதிப்பு குறித்து பேசினா்.
கள ஆய்வு பயிற்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி , டிஜிட் ஆல் தென்காசி தலைமை ஒருங்கிணைப்பாளா் செந்தில் , தென்காசி லைஃப் சேனல் நிறுவனா் ஜஸ்டின் ஆகியோா் பேசினா்.
ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளா் காருண்யா மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.