பெண் மருத்துவரை தாக்கி நகை பறிப்பு
வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் நேருஜி நகரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (75). முன்னாள் ராணு வீரா். இவரது மனைவி சிவானந்தம் (68). அரசு மருத்துவா். இவா்களது மகன் வெளியூரில் வசித்து வருகிறாா். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவா்களது மகள், நேருஜி நகரிலேயே மற்றொரு தெருவில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுவிட்ட நிலையில், சிவானந்தம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். பிற்பகலில் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபா் சிவானந்தத்தை மிரட்டி அவா் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றாா்.
ஆனால், அவா் அதை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால், பாதி சங்கிலி மட்டுமே அந்த நபரின் கையில் சிக்கியது. மேலும், அவா் அணிந்திருந்த கம்மலை அந்த நபா் பறிக்க முயன்றாா். சிவானந்தத்தின் கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்ததையடுத்து, அந்த நபா் கம்மலை விட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டாா். காதில் காயங்களுடன் அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.