`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
பெண் முன்னேற்றத் திட்டங்கள்: இலவசமோ, உதவியோ, செலவோ அல்ல... முதலீடு!
‘பாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் கொள்கைகளில் அதன் முதலீடும், கவனமும் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள், பணிச்சூழல் பங்களிப்புக் குறைவு மற்றும் பெண் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், முழுமையான பாலின சமத்துவத்தை அடைய தடையாக உள்ளன’ என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பான ஐ.நா.
அந்த அமைப்பின் உயர் அலுவலர்களில் ஒருவரான டானியல் சீமோர் மற்றும் இந்தியப் பெண்களுக்கான ஐ.நா பிரதிநிதி சூசன் ஜேன் ஃபெர்குசன் இருவரும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள மேற்கண்ட மதிப்பீடு, பெண் சமத்துவத்தில் இந்தியா கடக்க வேண்டிய சவால்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டில் பெண் முன்னேற்றத்துக்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள பெரும் முயற்சிகள், உலக அரங்கில் பாராட்டுப் பெற்றவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஞ்சாயத்து தேர்தல்களில் 33% முதல் 50% வரை இட ஒதுக்கீடு; சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் 33% இட ஒதுக்கீட்டுக்கான முன்னெடுப்பு; மகப்பேறு விடுமுறை சட்டங்கள்; ராணுவத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியமர்த்தப்படுவது; பாலின பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் வலிமையானதே!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், பெண் முன்னேற்றம் சார்ந்து தொலைநோக்குடனும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களைப் பாராட்டுவோம். அதேநேரம், பெண் கல்வி, ஆரோக்கியம் தொடங்கி இந்த டிஜிட்டல் யுகத்துக்கான பணிகள் மற்றும் தொழில் பங்களிப்பு வாய்ப்புகள் வரை செல்ல வேண்டிய தூரமும் நீண்டு கிடக்கிறது என்பதை உணர்வோம்.
உரிய திட்டங்களையும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் அடைய அரசு முதலீடு செய்வதுடன், தனியாரின் முதலீடுகளும் அவசியம். ஆம்... இது உதவியோ, சேவையோ அல்ல... முதலீடு என்பதை உணர்ந்து தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அந்தப் பெரும் மனிதவளத்தின் மூலம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் பங்குதாரர்களாக இருக்கப்போவது அவர்களும் தானே?!
சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, முன்னேற்றத் திட்டங்களுக்கு முன்னோடியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை... பாலினம் சார்ந்த பயமுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான வாழ்வை பெண்களுக்கு உறுதி செய்வது; பெண்களின் விடுதலை, சுதந்திரம், உரிமைக்கு எதிராக இன்றும் வேர்ப்பிடித்திருக்கும் பழமைவாத சமூகக் கட்டுப்பாடுகளைக் களைந்தெறிவது; குடும்ப வன்முறை முதல் பாலியல் கொடுமைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரேயடியாக ஒழிப்பது என இந்த மூன்றுக்கும்தான்.
களைகளை வெட்டியபடியே சிகரத்தில் ஏறுவோம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்