புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க...
`பெரியார் தமிழகத்தின் கலங்கரை விளக்கம்; தற்குறிகள்தான் அவரை விமர்சிப்பார்கள்' - துரை வைகோ காட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், "கடந்த காலங்களில் பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என இந்திய கூட்டணியை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதே போன்று ஈரோடு இடைத்தேர்தலிலும் திமுக-வை மக்கள் வெற்றி பெறவைப்பார்கள். ஏன் என்றால் இது பெரியார் மண். பெரியார் தமிழகத்தில் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். பெண் சமுதாயம் முன்னேறி இருக்க பெரியார் தான் காரணம். பெரியாரை இழிவுபடுத்திய பிறவிகளுக்கு ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் மிகவும் கொடுமையானது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி அறிக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டுள்ளது. இதில், அதிக கவனம் செலுத்தித்தான் சிபிசிஐடி விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பார்கள் என நம்புகிறேன். அப்படி ஒருவகையில் அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாக இருந்தால் சென்னை உயர் நீதிமன்றம் அதை ஏற்காது. இதனால், இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். அதுதான் இறுதி முடிவாக இருக்கும்.
தமிழகத்தில் பெரியாரும் வேண்டும். பெருமாளும் வேண்டும் என நான் கருதுகிறேன். பெரியார் இல்லாமல் சமூக வளர்ச்சி கிடையாது. இருமொழிக் கொள்கை தமிழகத்தில் இருக்க பெரியார் தான் காரணம். பெரியார் என்கிற மனிதரை இழிவுபடுத்துவதாக யாராக இருந்தாலும் அவர்கள் தற்குறிகள்தான். திராவிட இயக்கத்தின் அடித்தளம் பெரியார் கொடுத்த கொள்கைதான். தமிழகத்தில் பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. கருத்து மோதல் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தார். அது வன்மமாக மாறக் கூடாது.
பரந்தூர் விமான நிலையம் தவிர்க்க முடியாமல் தேவைப்படும் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரம், கர்நாடகத்தில் இருப்பவர்கள் ஐரோப்பிய நாடுகள் செல்ல சென்னை வந்து சென்றனர். மற்ற விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விரிந்து உள்ளது. ஆனால், சென்னை விமான நிலையம் அப்படி இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும்போது நீர்நிலைகளில் குறைந்தபட்ச பாதிப்புடன் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். அப்படியானால், விமான நிலையம் அமைக்க இடத்தை நீங்களே தேர்வு செய்து கொடுங்கள். டங்ஸ்டன் பிரச்னை வேறு; பரந்தூர் விமான நிலையம் பிரச்னை வேறு. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.