பேரணாம்பட்டு: மலைக்கிராம மாணவிகளிடம் அத்துமீறல்... தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், பேரணாம்பட்டு அடுத்துள்ள ஓர் மலைக்கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், 9-ம் வகுப்புப் பயிலும் 3 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் உதயகுமார் குறித்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்குப் புகார் சென்றது. இதையடுத்து, குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி.
வருவாய்க் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பேரணாம்பட்டு தாசில்தார் வடிவேல் ஆகியோரும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளின் தோள் மீது கை போடுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது எனத் தலைமை ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் `போக்ஸோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைதுசெய்யப்பட்டார் தலைமை ஆசிரியர் உதயகுமார்.