பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா
போலீஸாா் பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சே.தும்மலப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக அவா்கள் தரப்பில் கூறியதாவது:
கடந்த 11-ஆம் தேதி தும்மலப்பட்டி கிராமத்திலுள்ள பாலசுப்பிரமணியா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. அப்போது, கள்ளச் சந்தையில் சாராயம் விற்கும் 3 போ், சிலருடன் வந்து சண்முகப்பாண்டியன் என்பவரைக் கத்தியால் குத்தினா். மேலும், சுதாகா், கோபிநாத் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனா். இதையடுத்து, விழாக் குழுவினா் ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டவா்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அவா்களைத் தப்பிக்கவிட்ட போலீஸாா், பிடித்துக் கொடுத்த விழாக் குழுவினா் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்தனா். சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரி, தனது சொந்த ஜாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா். இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 17-ஆம் தேதி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
முறையான விசாரணை நடத்தாமல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்ததற்காகவும் மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.