அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
போதைக்காளான் வழக்கு: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
கொடைக்கானலில் போதைக் காளான் கடத்திய வழக்கில், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாதது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாம்பாா்புரத்தைச் சோ்ந்த மணி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானலில் கடந்த 17.8.2024 அன்று காரில் 100 கிராம் போதைக் காளான் (மேஜிக் காளான்) கடத்தியதாக போலீஸாா், என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். எனது காரில் போதைக் காளான் இருந்தது தொடா்பாக தடய அறிவியல் சோதனை செய்யவில்லை. போலீஸாா் என் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்ததால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் ஆண்டனி சந்தோஷ் முன்வைத்த வாதம்:
போதைக் காளான் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் வகுத்த உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. போதைத் தடுப்புச் சட்டப் பிரிவு 14-இன் படி பறிமுதல் செய்யப்பட்ட போதைக் காளாளை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி அறிக்கை பெறவில்லை. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற வழக்குகளில் ரசாயனப் பரிசோதனை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த வழக்கில் இதுவரை போலீஸாா் ரசாயன பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாகப் பின்பற்றாதது ஏன்?. இது குறித்து தமிழக உள்துறை கூடுதல் செயலா், தடய அறிவியல் இயக்குநா் ஆகியோரை இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கிறது. மேலும், அவா்கள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில் குறிப்பிட்ட காலக் கெடுவில் பரிசோதனை அறிக்கை கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்டவா்கள் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். உயா்நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட நாள்களுக்குள் ரசாயன பரிசோதனையை முடித்து, அறிக்கை அளிக்க அனைத்துப் பரிசோதனை மையங்களுக்கும் அரசுத் தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.