'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
போதைப் பொருள் ஒழிப்பு: களத்தில் இறங்கிய பிரேசில் இராணுவம்; துப்பாக்கிச் சூட்டால் 132பேர் பலி
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், அரசக் காலத்திலிருந்தே குற்றச் செயல்கள், கடத்தல், காங்க்ஸ்டர் குழுக்கள், போராட்டக் குழுக்கள் பதுங்கியிருக்கும் நகரமாக இருந்தது.
இப்போது கடந்த சில ஆண்டுகளாக அங்கு போதைப் பொருள்கள், கடத்தல்கள், கேங்ஸ்டர் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக பிரேசில் காவல்துறை கூறுகிறது. குறிப்பாக, போதை ஆசாமிகள் இருப்பது சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், அந்த போதை ஆசாமிகள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இந்த போதை, கடத்தல், கேங்ஸ்டர் ஆதிக்கம் மற்றும் துப்பாக்கிக் கலாசாரம் அங்கு அதிகரித்து, நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததைத் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க பிரேசில் அரசு கடந்த சில மாதங்களாகத் திட்டமிட்டு வந்தது. குறிப்பாக, ‘ரெட் கமாண்டு (Comando Vermelho)’ எனும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பிரேசில் காவல்துறையும் இராணுவமும் இணைந்து, 2,500 படைவீரர்களுடன் ரியோ டி ஜெனீரோ நகரில் அதிரடியாக இறங்கி ரெய்டு நடத்தியது. அந்தப் பகுதியில் இருக்கும் கேங்ஸ்டர் குழுவினரிடம் அதிக துப்பாக்கிகள் இருப்பதால், ஒரே நேரத்தில் இராணுவப் படைவீரர்கள் மொத்தமாக களத்தில் இறங்கினர்.
உளவுத்துறையின் தகவலின்படி, சந்தேகத்திற்குரிய இடங்களில் அதிரடியாக உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தினர். இதில் கேங்ஸ்டர் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
மொத்தமாக இராணுவம் களத்தில் இறங்கியதால் தாக்குப்பிடிக்க முடியாத கேங்ஸ்டர் குழுவினர் சிதறி ஓடினர். தப்பி ஓடியவர்களை ட்ரோன்கள் மூலம் தகவல் அறிந்து, இராணுவம் நகரம் முழுவதும் தேடித் தேடி சரமாரியாக சுட்டுக் கொன்றது. நகரமே துப்பாக்கிச் சூட்டால் புகைமண்டலமானது.

இந்த அதிரடியான ரெய்டில், போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் 132 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி ரெய்டில் 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. பலியானவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உடல்முன் கதறி அழுது, அந்நகரையே மரண ஓலத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், மனித உரிமைக் கழகங்கள், ஐ.நா., மற்றும் பிரேசிலின் உச்ச நீதிமன்றம், போலீசாரின் இந்தக் கடுமையான நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன.





















