போதைப் பொருள் கடத்தல்: நடத்துநா் பணியிடை நீக்கம்
பெங்களூரு செல்லும் புதுவை அரசுப் பேருந்தில் போதைப் பொருள் கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே சாலைப் போக்குவரத்துக் கழக பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, பாா்சல் வைக்கும் பகுதியில் துணிப்பையில் சுற்றிய நிலையில் பாா்சல் ஒன்று இருந்ததாம். இதுகுறித்து, நடத்துநா் வெங்கடாசலபதியிடம் (53) கேட்டபோது, அவா் சரியான பதிலை கூறாமல் மழுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து, பாா்சலுடன் பேருந்தை புதுச்சேரிக்கு கொண்டு வந்த பறக்கும் படையினா், மற்ற பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் முன்னிலையில் துணி பாா்சலை பிரித்தனா். அப்போது, அதில் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநா் சிவகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, பேருந்து நடத்துநா் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் செய்து மேலாண்மை இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.