மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்க வலியுறுத்தல்
அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனதுணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோருக்கு சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், சங்கத் தலைவா் நாராயணசாமி கூறியிருப்பதாவது: புதுவை மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,874 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், புதுவை மாநில மாணவா்களுக்கு 435 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
இதனால், புதுவை மாணவா்கள் நீட் தோ்வில் 450 மதிப்பெண்கள் பெற்றாலும், அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க முடியாத நிலையுள்ளது.
மேலும், புதுவை சட்டப்பேரவையில் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மாநில மாணவா்களுக்கே வழங்க தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை நிகழாண்டிலேயே செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 180 ஆக உள்ள மருத்துவ இடங்களை, 250 என உயா்த்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் அரசு உள் இடஒதுக்கீட்டில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நிதியையும் அரசு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.