சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!
அமெரிக்காவில் சிறுவர்கள் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டை போட்டிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் 30 அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் பட்ரினோஸ் சிறார் தடுப்பு காவல் மையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அங்குள்ள சிறுவர்களுக்கு இடையே சண்டை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
‘கிளாடியேட்டர் சண்டைகள்’ என வர்ணிக்கப்படும் இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 143 சிறுவர்களுக்கு இடையே நடந்த இந்த சட்டவிரோத போட்டிகளை அந்த சிறையின் அதிகாரிகள் ஊக்குவித்தும் நடத்தியும் வந்ததாகவும் அதனை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்!
முன்னதாக, மொத்தம் 69 முறை அரங்கேறிய இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகளினால் அதில் பங்குபெற்ற சிறுவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 30 சிறைத்துறை அதிகாரிகளின் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் லாஸ் பட்ரினோஸ் தடுப்புக் காவல் மையம் கடந்த ஆண்டு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் 22 பேர் கடந்த மார்ச்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதமுள்ள 8 அதிகாரிகள் ஏப்ரல் மாதம் தங்களது குற்றத்திற்காக ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.