போதைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமத்தில் சுப்ரமணியன் மகன் சக்திவேல் (38), தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் சக்திவேல் கடைக்கு சனிக்கிழமை சென்று சோதனையிட்டனா். அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் சக்திவேலை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.