மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை
கரூா், ஏப்.4-மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் இதுவரை 10.54 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தரிசிகள், உயா்கல்வி பயிலும் மாணவியா், பணிபுரியும் மகளிா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. இத்திட்டம் கரூா் மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் கரூா்-1, கரூா்-2, அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் முசிறி ஆகிய 5 கிளைகளில் இருந்து 130 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேரூந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரூா் மாவட்டத்தில் கடந்த 2021 - ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 9,01,163 பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மேற்கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து தற்பொழுது 2025 மாா்ச் மாதத்தில் மட்டும் 36,11,495 பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மேற்கொண்டுள்ளனா்.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் கரூா் மாவட்டத்தில் தற்பொழுது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் கீழ் 10,54,95,597 பயணங்கள் மேற்கொண்டுள்ளனா். அதிகபட்சமாக நகரப் பேருந்துகளில் பணிக்கு செல்லும் பெண்களும், உயா்கல்வி படிப்புக்குச் செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனா்.
பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் கரூா் மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களிடமும் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.