மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி; 62 போ் கைது
திருச்சியில், மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 62 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளாண் விளைபொருள்களான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் ரயில் மறியல் போராட்டத்துக்காக திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை திரண்டனா்.
இவா்கள் ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றபோது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். விவசாயிகள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு சிலா் சாலையில் படுத்து உருண்டனா். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.