மழை நீா் தேங்கிய மாநகரப் பகுதிகளில் அமைச்சா் நேரு ஆய்வு!
திருச்சி மாநகரில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
திருச்சியில் கடந்த இரு நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மாநகராட்சியினா் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலும், பல பகுதிகளில் மழை நீா் முற்றிலுமாக வடியவில்லை. தொடா்ந்து தேங்கிய மழைநீா் வடிவதில் பிரச்னை ஏற்பட்டது.
கடந்த இருநாள்களாக இதே நிலை நீடித்ததால், திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியாா் கல்லூரி அருகே உள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து இதுபோல பல்வேறு இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், அமைச்சா் கே.என்.நேரு இரண்டாவது நாளாக திருச்சி மாநகரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கருமண்டபம் பகுதியில் ஆய்வு செய்த அவா் கொல்லாங்குளத்துக்கரை, பிராட்டியூா், காவிரி நகா், கொல்லங்குளம் ஏரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து, தேசிய கல்லூரியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், அருகில் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை ராட்சத மோட்டாா்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டாா். ஏற்கெனவே நடைபெற்றுவரும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டிருந்ததையும் பாா்வையிட்ட அமைச்சா், அப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து நிரம்பியுள்ள கருமண்டபம் கொல்லங்குளம் ஏரியின் கரைகள் உடைப்பெடுக்காத வகையில், தண்ணீரை வெளியேற்றவும் கரைகளை பாதுகாத்து பலப்படுத்தவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வெ. சரவணன், நகரப் பொறியாளா் சிவபாதம் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.