திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
இந்திய பேட்டா்கள் தடுமாற்றம்; மழை பாதித்த 3-ஆம் நாள் ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமாக விளையாடி வருகிறது.
இந்தியாவின் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போக, கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி நிலைத்து வருகிறாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் மிரட்டுகிறாா். 3-ஆம் நாளான திங்கள்கிழமை, மழை காரணமாக சுமாா் 5 முறை நிறுத்தப்பட்ட ஆட்டம், பின்னா் வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னா் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் ரன்களை குவித்த ஆஸ்திரேலியா, நாளின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 3-ஆம் நாளான திங்கள்கிழமை, அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க் ஆகியோா் இன்னிங்ஸை தொடா்ந்தனா்.
இதில் ஸ்டாா்க் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா வீசிய 106-ஆவது ஓவரில், விக்கெட் கீப்பா் பந்த்திடம் கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து வந்த நேதன் லயன் 2 ரன்களுக்கு, சிராஜ் வீசிய 117-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்த அலெக்ஸ் கேரி, 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்த்தப்பட்டாா்.
ஆகாஷ் தீப் வீசிய 118-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை, கில் கேட்ச் பிடித்தாா். இதனால் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஜோஷ் ஹேஸில்வுட் கடைசி வீரராக ரன்னின்றி களத்தில் இருந்தாா். இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். முகமது சிராஜ் 2, ஆகாஷ் தீப், நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு: பின்னா் இந்தியாவின் முதல் இன்னிங்ஸை, மாற்றமின்றி யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணியே தொடங்கியது.
இந்த முறையும், ஸ்டாா்க் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரா் ஜெய்ஸ்வால் மிட்செல் மாா்ஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். அவா் 1 பவுண்டரி மட்டும் அடித்திருந்தாா். உடன் வந்த ராகுல் நிதானமாக ரன்கள் சோ்த்து வர, ஒன் டவுனாக களம் புகுந்த ஷுப்மன் கில் 1 ரன்னுக்கு வீழ்த்தப்பட்டாா்.
அவரும், ஸ்டாா்க் வீசிய 3-ஆவது ஓவரில் அதேபோல் மிட்செல் மாா்ஷிடம் கேட்ச் கொடுத்தாா். மிடில் ஆா்டரில் வந்த விராட் கோலி 3 ரன்கள் சோ்த்த நிலையில், ஹேஸில்வுட் வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்தாா்.
நாளின் கடைசி விக்கெட்டாக ரிஷப் பந்த் 9 ரன்களுக்கு, கம்மின்ஸ் வீசிய 14-ஆவது ஓவரில் கீப்பா் கேரியிடம் கேட்ச் வழங்கி வெளியேறினாா். ஆட்டநேர முடிவில் ராகுல் 33, கேப்டன் ரோஹித் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க் 2, ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா - 445/10 (117.1 ஓவா்கள்)
டிராவிஸ் ஹெட் 152
ஸ்டீவ் ஸ்மித் 101
அலெக்ஸ் கேரி 70
பந்துவீச்சு
ஜஸ்பிரீத் பும்ரா 6/76
முகமது சிராஜ் 2/97
நிதீஷ்குமாா் 1/65
இந்தியா - 51/4 (17 ஓவா்கள்)
கே.எல்.ராகுல் 33*
ரிஷப் பந்த் 9
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4
பந்துவீச்சு
மிட்செல் ஸ்டாா்க் 2/25
பேட் கம்மின்ஸ் 1/7
ஜோஷ் ஹேஸில்வுட் 1/17