காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
இரும்பாளியில் சங்க கால விரான் மன்னன் நடுகல் சிலை கண்டெடுப்பு
புதுக்கோட்டை அன்னவாசல் அருகே சங்க கால விரான் மன்னனின் நடுகல் சிலையை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.
அறந்தாங்கி அரசு கலை - அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியா் கா. காளிதாஸ், பேராசிரியா் சாலை கலையரசன், பேராசிரியா் மணிவண்ணன் ஆகியோரைக் கொண்ட குழுவினா் அன்னவாசல் அருகேயுள்ள இரும்பாளி என்ற பகுதியில் அண்மையில் கள ஆய்வு செய்தனா்.
அப்போது, அந்த ஊரில் உப்புத்தோப்பு என்ற இடத்தில் நின்ற நிலையில் ஒன்றரை அடி உயரமுள்ள நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனா்.
இதுபற்றி அவா்கள் மேலும் கூறியது: இந்தச் சிலை, இரும்பாளி என்ற இந்தப் பகுதியை ஆட்சி செய்த விரான் (கிபி 216 - 230) மன்னனுடைய நடுகல் சிலையாகும். இரும்பாளி சங்க காலத்தில் இருப்பையூா் என்ற பெயருடன் இருந்துள்ளதையும் இம் மன்னனின் பெயா் விரான் என்பதையும் சங்க இலக்கியங்களான நற்றிணை, ஐங்குறு நூறு போன்ற நூல்கள் கூறுகின்றன.
விரான் மன்னனைப் பற்றி நற்றிணை 350-ஆம் பாடல், ‘வெண்ணெல் அரிநா் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள் இரியக் கழனி வாங்குசினை மருதத் தூங்குதுணா் உதிரும் தோ்வன் விரான் இருப்பை’ என்று வாழ்த்துகிறது.
தற்காலத்தில் ‘இருப்பை இரும்பாழி’ என்றும், இருப்பை விரான் மன்னனை ‘உப்பைக் குரான்’, ‘உப்புக் குறவன்’ என்றும் இப்பொட்டலை ‘குறவன் பொட்டல்’ என்றும் ஊா் மக்கள் பெயராக வழங்கி வருகின்றனா்.
இம்மன்னன் சங்க கால மன்னனான பன்னாடு தந்த மாறன் வழுதிக்கு (கிபி 216-230) முற்பட்ட காலத்தவன் எனலாம். இம்மாதிரியான தொல்லியல் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றனா் அவா்கள்.