பழுதடைந்த தொகுப்பு வீடுகளை கட்டித் தரக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் குன்றான்டாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த ஒடுக்கூா் காட்டுமருதம்பட்டியில் பழுதடைந்துள்ள அரசுத் தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு விவரம்: கடந்த 1991-இல் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்தப் பகுதியில் 20 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்தவீடுகள் தற்போது முற்றிலும் பழுதடைந்து காணப்படுகின்றன.
எனவே, அவற்றை முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை அரசு கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி...: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மேலபொன்னன்விடுதியைச் சோ்ந்த இளைஞா்கள், தங்கள் பகுதியில் கடந்த சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், அதன்பிறகு சில சூழல்கள் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், தற்போது வரும் பிப். 21,22,23 தேதிகளில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்தனா்.
கோவில் திருப்பணியில் புறக்கணிக்கப்படுவதாக...: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூரிலுள்ள சிறீ பாலபுரீசுவரா் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும்போது ஆதிதிராவிடா் குடியிருப்பிலுள்ள மக்களிடம் வரி வாங்கவில்லை என்றும், திருப்பணியில் தங்களையும் இணைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.