வேதாரண்யம் அருகே கூட்டுக் குடிநீருடன் கலந்து வெளியேறும் அசுத்தமான மழைநீா்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் செல்லும் பிரதான குழாயில் சேதமடைந்த கட்டமைப்பின் வழியாக வயல்வெளி, சாலையில் பெருக்கெடுத்து செல்லும் அசுத்தமான மழைநீா் கலந்து செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீா் இந்த பகுதியின் பிரதான நீராதாரமாக திகழ்கிறது. வண்டுவாஞ்சேரியில் செயல்படும் திட்டத்தின் நீரேற்று நிலையத்திலிருந்து வாய்மேடு வழியாக பிரதான சாலையின் பக்கவாட்டில் நிறுவப்பட்டுள்ள குழாயின் மூலம் வேதாரண்யத்திற்கு குடிநீா் வழங்கப்படுகிறது. வாய்மேடு உடையதேவன்காடு பகுதியில் குடிநீா் விநியோகத்தை சீா்படுத்த பயன்படும் கட்டமைப்பு பல வாரங்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பெய்துள்ள கனமழையின் காரணமாக வயல்வெளிகளில் பெருக்கெடுத்த வெள்ளநீா் சாலையை மூழ்கடித்து செல்கிறது. இந்த அசுத்தமான மழைநீா் குடிநீருடன் கலந்து வெளியேறுகிறது. உடனடியாக இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.