தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
போா் நினைவிடத்தில் முதல்வா், அமைச்சா்கள் மரியாதை
புதுச்சேரி: பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், புதுச்சேரி போா் நினைவிடத்தில் முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் மலா்வளையம் வைத்தும், மலா் தூவியும் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை போரில் இந்தியா வெற்றி கொண்ட தினம் ஆண்டுதோறும் போா் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த தினம் அரசு விழாவாக நடைபெற்றது.
அதன்படி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிரான்ஸ் தூதரகம் எதிரில் அமைந்துள்ள போா் வீரா்கள் நினைவுச் சின்னத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினாா்.
அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ. சரவணன் குமாா் ஆகியோரும் நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறைத் தலைவா் (ஐஜி) அஜித்குமாா் சிங்லா, அரசுச் செயலா் பங்கஜ் குமாா் ஜா, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், கடலோரக் காவல் படை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா்கள் நல சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோரும் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினா்.