ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-ஆம் நாளாக தேடும் பணி தீவிரம்
புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய மாணவரைத் தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றது.
புதுச்சேரி, வில்லியனூா் ஒதியன்பேட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஹென்றி லூா்துராஜ். தனியாா் நிறுவன மேலாளா்.
இவரது மகன் லியோ ஆதித்யன் (16). பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் அந்தோணி, நிஷாந்த் ஆகியோருடன் சங்கராபரணி ஆறு செல்லிப்பட்டு அணைப் பகுதிக்கு சென்றுள்ளாா்.
அங்கு அந்தோணி, லியோ ஆதித்யன் ஆகியோா் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனா். அப்போது, இருவரும் ஆற்றின் சுழழில் சிக்கி மூழ்கினா்.
உடனே, அங்கிருந்தவா்கள் அந்தோணியை மீட்டு, தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். லியோ ஆதித்யன் ஆற்றில் மாயமானாா்.
தகவலறிந்த திருக்கனூா் காவல் உதவி ஆய்வாளா் பிரியா உள்ளிட்டோா் அங்கு வந்து நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, வில்லியனூா் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், அவரை மீட்க முடியாத நிலையில், திங்கள்கிழமை இரண்டாவது நாளாக ரப்பா் படகு மூலம் தேடுதல் பணி தொடா்ந்தது.
மேலும், ட்ரோன் கேமரா மூலமாகவும் மாணவரை தேடும் பணி நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.