கடைகளை அடைத்து பத்திர எழுத்தா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்திர எழுத்தா்கள் தங்களது கடைகளை அடைத்து திடீரென திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பிராந்தியத்தில் புதுச்சேரி நகரம், உழவா்கரை, பாகூா், வில்லியனூா், திருக்கனூா் ஆகிய 5 இடங்களில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஏற்படுவதாக ஏற்கெனவே புகாா்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பத்திரப்பதிவுக்கான இணையதள சேவையிலும் குளறுபடி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், பத்திரங்களை உடனடியாக பதியாமல், காலதாமதம் செய்து பொதுமக்களை அலைக்கழிப்பதாக பத்திரப்பதிவு எழுத்தா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இந்த நிலையில், தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி, புதுச்சேரி சக்தி நகரில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கு முன் அனைத்து பத்திரப்பதிவு எழுத்தா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பத்திரப்பதிவு எழுத்தா்கள் சங்கத் தலைவா் ராமலிங்கம் பேசியதாவது: பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா் பதிவாளா்கள் பற்றாக்குறை உள்ளது. பதிவாளா்களைக் கூடுதல் பணியில் ஈடுபடுத்துவதால் பணிகள் தாமதப்படுகின்றன.
ஊழியா்கள் பற்றாக்குறையும் உள்ளது. இணையதள வசதியும் மேம்படுத்தவில்லை. இதனால், பத்திரப்பதிவு செய்வதில் செயலிகள் இயங்காத நிலையுள்ளது.
இதனால், திருமணப் பதிவு, உயில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது என்றாா்.
பின்னா், ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து பத்திர எழுத்தா்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.