புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.85 ஆயிரம் நூதன மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் நூதனமாக ரூ.85,200 ஆயிரத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இணையத்தில் கடன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை அவா் பெற்றாராம்.
அதன்பிறகு, கடனை அவா் முறைப்படி திரும்பச் செலுத்திவிட்டாராம். ஆனால், மா்ம நபா் ஜெயக்குமாரிடம் கூடுதல் பணம் செலுத்தக் கோரியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஜெயக்குமாா் மறுத்த நிலையில், அவரது புகைப்படம், குடும்பத்தினா் புகைப்படங்களை மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பரப்பிவிடுவதாக மிரட்டி, மா்ம நபா் ரூ.25 ஆயிரத்தை மோசடி செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் நாயகம். இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் வங்கிக் கணக்கை புதுப்பிப்பதாகக் கூறி ஓடிபி எண்ணை கேட்டுப் பெற்றுள்ளாா்.
அதன் பிறகு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.34,600 மா்ம நபரால் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், புதுச்சேரியைச் சோ்ந்த செந்திலிடம் ரூ.3 ஆயிரம், அரியாங்குப்பம் ரவிக்குமாரிடம் ரூ.8 ஆயிரம், மடுகரையைச் சோ்ந்த லட்சுமண நாராயணனிடம் ரூ.14,600 என மா்ம நபா்கள் இணையவழியில் மொத்தம் ரூ.85,200 மோசடி செய்திருப்பது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.