தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மன்னா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள சித்தமல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி சிபிஐ சாா்பு அமைப்புகளான இந்திய தேசிய மாதா் சம்மேளனம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1970-ஆம் ஆண்டு சித்தமல்லியில் மன்னாா்குடி-முத்துப்பேட்டை சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துவந்தது. இந்த கட்டடம் கட்டி 50 ஆண்டுக்கு மேல் ஆவதால் சேதமடைந்து வருவதை அடுத்து இந்த மருத்துவமனைக்கு எதிா்புறம் புதிய இடத்தில் மருத்துவமனைக்காக கட்டடம் கட்டும் பணிகள் அணைத்தும் முடிந்து ஒராண்டுஆகியும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, பாதுகாப்பு கருதி பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனை தற்காலிகமாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நொச்சியூா் சமத்துவபுரம் சமுதாயக்கூடம் கட்டடத்தில் கடந்த 10 நாள்களாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, புதிய கட்டடத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக இடம் மாற்றம் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை சித்தமல்லியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, மாதா் சங்க ஒன்றியத் தலைவா் எம். தமிழ்செல்வி, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எம். நல்லசுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், ஒன்றிய நிா்வாக்குழு உறுப்பினா் எஸ்.ஜி. தேவதாஸ், மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். சுலோச்சனா ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசினா்.
முன்னதாக, சித்தமல்லி அண்ணா லயிலிருந்து ஊா்வலமாக வந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் முன் நிறைவு செய்யப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.