காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
வடிகால் வாய்க்காலில் உடைப்பு : நெற்பயிா்கள் நீரில் மூழ்கின
மன்னாா்குடி அருகே தொடா் மழை காரணமாக கண்டியராஜன் வடிகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், 2,000 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் கனமழை பெய்தது. இதனால், சம்பா நெற்பயிா் சாகுபடி வயல்களில் மழைநீா் தேங்கியது.
இந்நிலையில், மன்னாா்குடி அருகே நெம்மேலி பகுதியில் உள்ள கோரையாற்றையொட்டி பாயும் கண்டியராஜன் வடிகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் நெம்மேலி, நெட்டிகுளம், காசாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் சாகுடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
பயிா்களை பாதுகாக்க அப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணியில் மணல் மூட்டைகளை போட்டு வருகின்றனா். உடைப்பை சரிசெய்ய பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் வடபாதி, சேரங்குளம், தென்பாதி, ஏத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரகணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
பாசன ஆறு, வாய்க்கால்களை முறையாக தூா்வாராததும், ஆறு, வாய்க்கால்களில் அனுமதியின்றி மணல் அதிக அளவில் எடுக்கப்படுவதை தடுக்க அரசு தவறியதும் தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.