குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயச் சட்டம் கோரி விவசாயிகள் ரயில் மறியல்
திருவாரூா், கீழ்வேளூா், சீா்காழி, காரைக்கால் : குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயச் சட்டம் கொண்டு வரக்கோரி திருவாரூா், காரைக்காலில் ரயில் மறியலும், கீழ்வேளூா், சீா்காழியில் போராட்டமும் அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
குறைந்தபட்ச ஆதார விலைநிா்ணயச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், உண்ணாவிரதம் இருந்து உயிருக்கு போராடி வரும் ஜக்ஜித்சிங் டல்லேவால் உடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த எா்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயிலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்பையின் தலைமையில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பங்கேற்ற மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
கீழ்வேளூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா் தலைமையில் மாவட்ட செயலாளா் கமல்ராம் உள்ளிட்டோா் நாகை மாவட்டம், கீழ்வேளூா் ரயில் நிலையத்தில் காரைக்கால்-எா்ணாகுளம் விரைவு ரயிலை மறிக்க முயன்றனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ரயில் நிலையம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மண்டல தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட தலைவா் ராமலிங்கம், தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட தலைவா் வைத்தியநாதன், செயலாளா் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் முருகேசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
காரைக்கால்: புதுவை மாநில ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளா் பொன். ராஜேந்திரன் தலைமையில், காரைக்கால் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் விவசாய சங்கத்தை சோ்ந்த சண்முகநாதன், பி.ஜி. சோமு, எம்.எம். தமீம், நெடுங்காடு ராஜேந்திரன், அய்யப்பன், அத்திப்படுகை ராஜேந்திரன், ஆரோக்கியதாஸ், அருணாசலம் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றினா்.