திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
செங்கல்பட்டு: திருப்போரூா் வட்டத்தில் புதன்கிழமை (டிச. 18) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது.
மக்களை நாடி, மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தினை செயலாக்கும் நோக்கில் வரும் 18.12.2024 (புதன்கிழமை) அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களால் திருப்போரூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாயவிலைக் கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
நிகழ்வின் ஒரு பகுதியாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை திருப்போரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகத்தால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.