மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பருவமழை நின்ற நிலையில், வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கடந்த வாரம் புயல் மற்றும் மழை காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மழை ஓய்ந்த நிலையில் ஒரு வாரத்துக்குபின் பிறகு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் மாமல்லபுரத்தில் குவிந்தனா். கடற்கரை கோயில், ஐந்தரதம், அா்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது.
குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சறுக்குப் பாறையில், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனா். கடற்கரையில் குவிந்த பயணிகளில் பலா் அலையின் அழகை கண்டுரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனா். அப்போது மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் மாமல்லபுரம் எஸ்ஐ திருநாவுக்கரசு உள்ளிட்ட ரோந்து போலீஸாா் அலையில் ஆபத்தை உணராமல் கடலில் குளித்த சுலா பயணிகளை கரைக்கு அழைத்து, அறிவுரை கூறி அனுப்பினா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த காரணத்தால் வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதனால் போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் போலீஸாா் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுற்றுலா பயணிகள் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் களைக்கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா்.