தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்: கிராம மக்கள் மறியல்
நெய்வேலி: நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, கடலூா் மாவட்டம், பாலூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம், நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவா்களைக் கொண்ட 12 ஊராட்சிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அதிமுக தலைவா்கள் பண்ருட்டி வட்டாட்சியா், கடலூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக்கூறி, பாலூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அண்ணாகிராமம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமரசம் ஏற்படாததையடுத்து, மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.
இதேபோல, வெள்ள நிவாரணம் கோரி குச்சிப்பாளையம், வானமாதேவி, மணி நகா் பகுதிகளிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.