ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை
ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் கைதாகி விடுதலை
சிதம்பரம்: மத்திய அரசைக் கண்டித்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்; விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறியும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விவசாயிகள் திங்கள்கிழமை காந்தி சிலை அருகே திரண்டனா். பின்னா், அவா்கள் ஊா்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனா். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கண்ணன், கௌரவத் தலைவா் லட்சுமிகாந்தன், துணைத் தலைவா் அன்பழகன், இணைச் செயலா் காஜா மொய்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், நகர காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, அண்ணாமலை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்ட போலீஸாா் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினா். 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.